சில தினங்களுக்கு முன் எங்கள் ஊரில் உள்ள நரசிம்மர் கோவிலின் திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஒரு நாள் நிகழ்ச்சியாக ஜெயாடிவி்யில் காலையில் தினம் ஒரு திவ்விய தேசம் என்ற தலைப்பில் உரையாடும் டாக்டர் அனந்த பத்மநாப தேசிகாச்சிரியார் என்பவர் உபன்யாசம் செய்தார். அதில் அவர் வேடிக்கையாக ஒரு வாக்கியம் சொன்னார். அவர் வேடிக்கையாக சொன்னாலும் அதில் உள்ள உண்மை என்னை உலுக்கியது அதன் விளைவே இக்கட்டுரை. இக்காலத்தில் இறைவனுக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன் , கங்கை கொண்ட சோழபுரத்தில் கோவிலை கட்டிய அவனது புத்திரன் ராஜேந்திரன் சோழன், திருபுவனத்தில் கோவிலை கட்டிய அவனது புத்திரன் இரண்டாம் ராஜேந்திர சோழன் போன்றவர்கள் பாவம் இப்போது தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு முறை பிறந்தால் துணுக்குறுவார்கள்.
நாம் கனவிலும் நினைத்திர முடியாத உலக மக்கள் அதிசயிக்கும் வண்ணம் கட்டிடக் கலையின் தொன்மையின் பறைசாற்றும் வண்ணம் அக்கோவிலை நிறுவியுள்ள மன்னர்கள் அவர்களின் புகைப்படங்களோ அல்லது பெயர்களோ அல்லது அவர்களின் வாரிசுகளின் புகைப்படங்களோ கல்வெட்டில் எங்கும் பொறிக்கவில்லை. அருமையான கல் வேலைப்பாடு கொண்டுள்ள சிற்பங்களின் அருகில் அதை செதுக்கிய சிற்பியின் பெயர் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இந்த மன்னர்களை தவிர மேற்கண்ட கோவிலுக்காக தங்கள் பொன்னான உழைப்பையும் கலைத்திறனையும் அர்ப்பணித்த அந்த தொழிலாளர்களின் ஸ்நான பிராப்தி கூட நமக்கு தெரியாது.
ஆனால் தற்போது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் அல்லது சுதை சிற்பத்தில் என்ன அஷ்டகோணலான அமைப்பிலும் ஒரு சிலையை செதுக்கி விட்டு அந்த அகோரமான சிலையின் அருகே சிற்பி - ஸ்தபதி அவரின் செல்போன் அவரின் அடை மொழி என்ற விபரங்கள் நிச்சயம் உள்ளன. மேலும் தற்போது கட்டப்பட்டு அல்லது புணரமைக்கப்பட்டு வரும் அனைத்து கோவில்களிலும் தெய்வத்தின் முகம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சியை வழங்கியவர்கள் என்று தொலைக்காட்சியில் விளம்பரம் வருவது போல எங்கெங்கு காணிணும் உபயதாரர்கள் நன்கொடையாளர்கள் பெயர் பளிச்சிடுகின்றன. ஒரு டியூப் லைட் உபயம் அளித்தால் கூட டியூப் லைட் வெளிச்சம் மங்கும் வண்ணம் அதன் மேல் சிவப்பு கலர் பெயிண்டில் உபயம் என்று கொட்டை எழுத்தில் எழுதுகிறார்கள். பாவம் நமது மூதாதையர்கள் காலத்தில் நல்ல வேலையாக இந்த விளம்பர பித்து பிடிக்கவில்லை. மேலும் இந்த விளம்பர பித்தின் உச்சகட்டமாக அரிதாரம் பூசும் நடிகர்கள் நான் இந்த கடவுளை வணங்குவேன், இந்த கோவிலுக்கு செல்வேன் என்றால் நமது மக்கள் உடனே அந்த கோவிலுக்கு படையெடுக்கிறார்கள். காலம் காலமாக தமிழ்நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் மற்றும் வைணவ ஸ்தலங்கள் எண்ணெய் விளக்கு ஏற்றக் கூட வழியில்லாத நிலையில் அல்லாடிக் கொண்டிருக்கின்றன அங்கு எவரும் செல்வதாக இல்லை. ஆனால் இவர்கள் கூறியவுடன் அந்த கடவுளுக்கு ஒரு தனி சக்தி வந்தது போல அங்கு பித்து பிடித்தவர்கள் போல் சென்று வழிபடுகிறார்கள். இதை மனதில் வைத்துக் கொண்டு தான் மேற்கண்ட சொற்றொடரை அந்த உபன்யாசர் கூறினார் போலும், மேலும் இந்த விளம்பர பித்து சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாவரையும் வியாபித்து உள்ளது. இது எங்கு போய் முடியுமோ
No comments:
Post a Comment